Friday 25 April 2014

முரண்

முரண்


அரசு மருத்துவமனை.

வெள்ளை நிறத்தில் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது.

படுக்கையில் காலில் கட்டுடன் மூர்த்தி படுத்திருந்தான். சவரம் செய்யாத முகம். கண்களில் களையே இல்லை. கலைந்திருந்த தலை அவன் பல நாட்களாக இங்குதான் இருக்கிறான் என்பதைச் சொன்னது. கையில் பச்சை குத்தியிருந்த “லட்சுமி” என்ற பெயரைப் பார்த்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தவன், தன் காலை யாரோ தொட்டுப் பார்ப்பதை உணர்ந்து லேசாகத் திடுக்கிட்டு எழ,

அருகில் இருந்த டாக்டர் அவன் காலைத் தொட்டுப் பார்த்தபடி,

“வலிக்கிதா மூர்த்தி?...”

என்று கேட்டார்.

கண்களில் இருந்த அழுக்கைத் துடைத்தபடி,

“ம்...”

ஆமாம் என்பதுபோல் தலையாட்டினான்.

பக்கத்திலிருந்த நர்ஸிடம் ஏதோ ஆங்கியப் பெயரைச் சொல்ல, அவள் ஒரு சிரிஞ்சில் மருந்தைச் செலுத்திக் கொடுத்தாள்.

சிரிஞ்சை அழுத்தி சிறிது மருந்துத் துளிகளை வெளியே பீய்ச்சிவிட்டுப் பிறகு மூர்த்திக்கு ஊசி போட்டார்.

மூர்த்தி கையில் ஒரு பஞ்சுத் துண்டைக் கொடுத்துத் தேய்த்துக் கொள்ளச் சொல்லும்படி சொல்லிவிட்டு நர்ஸுடன் வந்த டாக்டரை அந்த வார்டின் முனையில் இருந்து பரமசிவம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைக் கடந்து சென்ற டாக்டரிடம்,

“இப்ப எப்படி டாக்டர் இருக்கு?...”

“ம்... கொஞ்சம் பெட்டரா இருக்கு...”

“எப்ப ஃபுல்லா கியூராகும்?...”

“ஒரு அஞ்சாறு நாள்...”

என்று சொல்லிக் கொண்டே அவர் அறைக்குச் செல்ல,

“அஞ்சாறு நாளா?...”

என்று அதிர்ச்சியாகக் கேட்க,

உள்ளே சென்ற டாக்டர் உட்கார்ந்து கொண்டே,

“அதுக்கு ஏன் அவ்வளவு ஷாக் ஆகுறீங்க?... அவரால உங்க வேலை நிக்கிதா என்ன?...”

பரமசிவம் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியுடன் பெருமூச்சு விட்டார்.


ஐந்து நாட்களுக்குப் பிறகு.


மூர்த்தியின் கட்டு அவிழ்க்கப் பட்டது.

மூர்த்தி எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

முன்னும் பின்னுமாக இரண்டு முறை டாக்டர் நடக்கச் சொன்னார்.

நடந்தான்.

நின்று கொண்டிருந்த பரமசிவத்திடம்,

“ஹீ இஸ் ஆல்ரைட் நௌ... யூ கேன் டேக் ஹிம்...”

“அவன் உடம்புக்கு வேற ஏதும் பிரச்சனை இல்லேல்ல டாக்டர்?...”

லேசான சலிப்புடன் டாக்டர்,

“ப்ச்ச்...”

என்று சொல்லி நர்ஸிடம் திரும்பி,

“ஃபார்மாலிட்டிஸ்லாம் பண்ணிடுங்க...”

என்று சொல்ல,

நர்ஸ் சரி என்றபடித் தலையாட்டிவிட்டுச் சென்றாள்.

மூர்த்தி முன்னால் நடக்க அவனைத் தொடர்ந்து நடந்த பரமசிவம் தன் பாக்கெட்டிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்துவிட்டுக் கையில் வைத்துக் கொண்டார்.

தன் சீட்டில் வந்து உட்கார்ந்த டாக்டரிடம் சில காகிதங்களை நர்ஸ் வைக்க, அதை டாக்டர் பிரித்துப் பார்க்க, அதனுடன் பரமசிவம் வைத்திருந்த காகிதமும் பின் பண்ணப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த டாக்டர் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த மூர்த்தியைப் பார்த்தார்.

மீண்டும் அந்தக் காகிதத்தைப் பார்க்க,

அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்,

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட மூர்த்தி என்பவர்மீது எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி குற்றம் நிரூபிக்கப் பட்டதால் இபிகோ 302-ஆம் பிரிவின் கீழ் குற்றவாளியை சாகும்வரை தூக்கிலிடும்படி இந்த மதிப்பிற்குரிய நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது...



என்று எழுதப்பட்டு இறுதியில் பேனாவின் நிப் உடைக்கப்பட்டிருந்தது.


Monday 7 April 2014

"அன்புடன் விக்ரம்"

அன்புடன் விக்ரம்

பதற்றத்தோடு அங்குமிங்கும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை அடைவதற்காக. ஆனால் அதுவோ அங்கிருந்த எல்லோரின் கைக்கும் மாறி மாறிச் சென்றது. வகுப்பறையிலிருந்த சிறுவர்கள் வாசுவை வெறுப்பேற்றுவதற்காக அவனுடைய நோட்டை மாற்றி மாற்றிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

எல்லாம் இந்த முத்துவால் வந்தது, என்று மனசுக்குள் திட்டிக்கொண்டு கண்களில் லேசாக ஈரம் கசிய,

“குடுங்கடா...”

என்று கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டும், இயலாமையால் முகம் கோண, அழும் தோரணையில் எல்லோரின் கைகளை நோக்கியும் கைநீட்டி ஏமாந்து கொண்டிருந்தான்.
இப்படியே போய்க் கொண்டிருந்த நோட்டு கடைசியில் முத்துவே மனம் மாறியதால், பரிதாபம் காரணமாக வாசுவிடம் கொடுக்கப்பட்டது.

அதை வாங்கிக்கொண்டுத் தன் இருப்பிடமான கடைசி பெஞ்சுக்குப் போய் இருப்பதே தெரியாமல் உட்கார்ந்து கொண்டான்.

அதற்குள் உள்ளே நுழைந்த ஆசிரியர் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

யாருக்கும் தெரியாமல் தன் நோட்டை எடுத்து அதில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தை பிரித்தான். அதில் ஒரு பேப்பர் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிரித்தான்.

அதில் “அன்புடன் விக்ரம்” என்று எழுதி ஒரு புகழ் பெற்ற நடிகனின் கையெழுத்து இருந்தது. அதைப் பார்த்து அதுவரைக் கண்களிலேயே தேக்கி வைத்திருந்த கண்ணீரை வெளியிட்டான்.
அந்தக் காகிதத்திற்காகத்தான் அவ்வளவு வேகமாக ஓடியலைந்து தவித்ததை எண்ணும்போது அவனுக்கு சற்று சிரிப்பாகவும் இருந்தது.

அந்தக் கையெழுத்து வாங்கிய நாளையும், சூழ்நிலையையும் சற்று நினைத்துப் பார்த்தான்.

அந்த மதிய நேரத்தில்...

கோயில் தெப்பக்குளத்தில் பொரியைப் போடும்போது வந்து மொய்க்கும் மீன் கூட்டத்தைப் போல, அந்த மைதானத்தில் சில சிறுவர்கள்,

“ஹேய்... படம் எடுக்குறாங்க...”

என்று கூட்டமாகக் கத்தியதும் மதிய உணவைக் கூட மறந்து மாணவர் பட்டாளம் மைதானத்திற்குப் படையெடுத்தது.

அதில் வாசுவும் ஒருவன்.

ஆனால் அவனால் மற்றவர்கள்போல் ஓட முடியாமல் தடுத்தது அவன் தொடை வரை போட்டிருந்த அந்த உலோகத்தாலான கவசம். போலியோவால் பாதிக்கப்பட அந்த நீளம் குறைந்த காலுடன் முடிந்தவரை முயற்சி செய்தான் வாசு.

அந்த நடிகனைச் சுற்றியிருந்த கூட்டத்தில் பாதிபேர் அவனைப் பார்ப்பதிலும் பாதிபேர் கையெழுத்து வாங்குவதிலும் குறியாய் இருந்தார்கள். கையெழுத்து வாங்காதவர்கள் கொஞ்சம் வழிவிடலாமே என்று தனக்குள் முனகிக் கொண்டு சுற்றிச் சுற்றி ஓட முயற்சித்தான். அவனால் முடியவில்லை.

முண்டியடித்துக் கொண்டு கூட்டத்துக்குள் நுழைந்து முன்னேறிக் கூட்டத்திற்கு முன் வந்து நிற்பதற்குள், அந்த நடிகன் காருக்குள் ஏறிவிட, கார் கிளம்பியது.

அந்தக் கூட்டத்தின் இறுக்கம் மெல்ல தளர்ந்தது.

அந்தக் காரையே முறைத்துப் பார்த்த வாசு, இன்னொரு சகாவை நோக்கி ஓடினான். வேகமாக அவனிடமிருந்த காகிதத்தை வாங்கிப் பார்த்தான்.

“நீ வாங்கலையாடா?...”

என்று அவன் கேட்க, அந்தக் கையெழுத்தையும் காரையும் மாறிமாறி பார்த்த வாசு,

“ம்... வாங்கிட்டேன்... இந்த நோட்டுல இருக்கு...”

என்றபடி திருப்பிக் கொடுத்தான்.

எல்லோரும் போனபின், தன் நோட்டை எடுத்து அதில் அந்த நடிகனின் கையெழுத்தைப் போலவே, “அன்புடன் விக்ரம்” என்று எழுதி உள்ளே வைத்துக் கொண்டு கண்களில் வெறித்தனமான வெற்றிக் களிப்புடன் சென்றான் தன் காலை ஊன்றியபடி வாசு.