Saturday 7 March 2015

மகளிர் தினம்


இந்து தர்மத்தில் பெண்ணை “சக்தி” என்றும், “சக்தியின் அம்சம்” என்று வழிபடுகிறார்கள்.
பிராணன் என்று சொல்லப்படும் உயிர்ச்சக்தியின் அம்சம் பெண்,
VITAL FORCE என்று அறிவியல் சொல்லும் சக்தியின் அம்சம் பெண்.
சக்தி இல்லையேல் எந்த இயக்கமும் வெளிப்படாது.
பெண் இல்லையேல் எந்த இயக்கமும் அவசியப்படாது.
சக்தியே செயலாகிறது.
சக்தியே பலனாகிறது.
எல்லா அசைவுகளும் சக்தியாலேயே நிகழ்கின்ரன.
நம் உடலை நாம் இயக்குவதற்கே சக்தி தேவை.
உலகில் விரவிக் கிடக்கின்ற சக்தியை ஒன்றிணைத்து ஒரு கம்பிக்குள் கொண்டு வந்தால் மின் சக்தி
மனதில் பரவிக் கிடக்கின்ற சக்தியை ஒன்றிணைத்து ஒரு கோட்டுக்குள் கொண்டு வருபவள் பெண் சக்தி
பெண்ணை பூமியின் ஒரு வடிவம் என்று புகழுரைக்கிறார்கள்.
பூமி எப்படி எல்லாப்பொருட்களையும் தன்னை நோக்கி ஈர்த்துக்கொள்கிறதோ,
அதே போல் பெண்ணும் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்தவள்.
இதில் இனமேதமே இல்லை...
ஆணோ, பெண்ணோ இரண்டையுமே ஈன்றெடுப்பது பெண்தான்.
மகளிர் தின வாழ்த்துக்களுடன்,
ராஜேஷ்குமார் ஜெயராமன்

Tuesday 3 March 2015

புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம்

    மாற்றங்கள் ஒன்றே உலகில் மாறாதவை. எந்த ஒரு படைப்பும் அதன் ஆரம்ப நிலையிலேயே இல்லாமல் அடுத்தடுத்த நிலைக்கு மாற்றியமைவதே பரிணாமம். அது தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் நிகழும். அது தனிமனிதராய் இருந்தாலும் சரி, இந்த உலகமே ஆனாலும் சரி. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

பரிணாமம் என்பதே மாற்றங்கள் என்றால் அது தானாகவே நிகழ்ந்து விட்டுப் போகிறது. அதை ஏன் நாம் செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்வி எழலாம். இந்த இடத்தில் மாற்றம் என்பதன் பொருள் முறைப்படுத்துதல் என்று பொருள்படுகிறது. ஒரு நதி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தைத் தானாகவே கடந்து சென்று கடலில் கலக்கும் என்பதும் இயற்கையாக நிகழும் மாற்றம். ஆனால் அந்த நதிக்கு அணையிட்டு வயலுக்குப் பாய்ச்சுதலே நாம் செய்ய வேண்டிய மாற்றம் ஆகும்.

ஒரு தனிமனிதன் குடும்பமாகி, குடும்பம் சமூகமாகி, சமூகம் ஊராக, ஊர் நாடாக, நாடே உலகமாகிறது. ஆக உலகம் என்று நாம் சொல்வது நம்மைச் சுற்றியுள்ள தனிமனிதர்களின் கூட்டத்தைத்தான். இது ஒரு சுழற்சி. உலகைப் புதியதாக்குவதற்கு முதலில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் புதுப்பிக்க வேண்டும். தன்னைப் புதுப்பித்தல் என்பது முதலில் தன்னைப் புரிதல் என்பதிலிருந்தே தொடங்குகிறது. இந்த உலகில் ஜனிக்கும் அத்தனை உயிர்களுக்கும் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் வாழ்க்கை என்பது பொதுவானது. அத்தியாவசியத் தேவைகள் என்பது ஒன்றுதான். ஆசைகள், தேவைகள் என்று எதையெல்லாம் நாம் எதிர்நோக்கி வாழ்கிறோமோ, அது அத்தனையும் மற்றவர்களுக்கும் உண்டு என்ற எண்ணம் எப்போது வருகிறதோ அப்போதுதான் அந்தப் புரிதல் நிகழும். அப்போதுதான் மனிதம் புதுப்பிக்கப்படும். உலகமும் புதுப்பிக்கப்படும்.

புதியதோர் மனிதம் செய்வோம்!


புதியதோர் உலகம் செய்வோம்!

பெண்மையும் மென்மையும்

பெண்மையும் மென்மையும்

      வாசலில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஜெர்ரி குரைப்பதைக் கேட்டபோதுதான், கேட்டை திறந்தபடியே விட்டுவிட்டு வந்தது ஹரீஷுக்கு ஞாபகம் வந்தது. வேகமாக வாசலுக்கு ஓடினான். எது நடக்கக்கூடாது என்று நினைத்து ஓடினானோ அதுவே நடந்திருந்தது. 

அந்தத் தெருவோரத்தில் நரிக்குறவர் கும்பல் ஒன்று சமீபகாலமாக ஆக்ரமித்திருந்தது. அந்த கும்பலைச் சேர்ந்த சிறுவர்கள் சில நேரங்களில் விளையாட்டிக்கொண்டே வீட்டு வாசலுக்கு வந்து நின்று கொண்டிருப்பது ஹரீஷுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. எவ்வளவோ விரட்டிப் பார்த்தும் மீண்டும் மீண்டும் அங்கேயே வந்து கொண்டிருந்தார்கள். இது பெரிய தொல்லையாக இருந்தது. அந்தச் சிறுவனை சத்தமில்லாமல் மிரட்டி வெளியே அனுப்பினான். அந்த நேரத்தில் உள்ளேயிருந்து நேஹா வர,

“இதோ பாரு நேஹா... அதுங்க இம்சை தாங்க முடியல... வாசல்ல காரை நிறுத்த முடியல... சாயந்திரம் ஒரு ஷட்டில் கார்க் விளையாட முடியல... கம்முனு போலீஸ்ல கம்ப்ளையிண்ட் பண்ணப்போறேன்...”

“என்னன்னு கம்ப்ளையிண்ட் பண்ணப்போற ஹரி?... அவங்க உன்னை என்ன பண்ணாங்க?... ஏதோ நாடோடிப் பொழப்பு பொழக்கிறவங்க... அங்கங்க கொஞ்ச நாள் இருந்துட்டு அப்படியே போயிடப்போறாங்க... அவங்க மேலப் போயி கம்ப்ளையிண்ட் குடுக்குறேன், அது இதுன்னுட்டு... போயி வேலையப் பாரு...”

நேஹாவுக்கு இது ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை.

“நான் ஆபீஸ் போயிட்டதுக்கப்புறம் நீதான் வீட்ல இருக்கப்போற நேஹா... அப்புறம் அவங்க இது பண்ணிட்டாங்க... அது பண்ணிட்டாங்கன்னுல்லாம் ஏதாவது சொன்னேன்னா, அவ்வளவுதான்... அன்னக்கி அப்படித்தான், நித்திஷ் கார்லருந்து கையில பலூனை வச்சிக்கிட்டு  இறங்குறான்... அந்தப கும்பல்லருந்து ஒரு பையன் பலூனையே உத்துப்பாத்துட்டு கிட்ட வர்றான்... அவனைப் பாத்துட்டு குழந்தை பயப்பட்றான்....அதுவும் ஒரு பொம்பள இருக்கே, அவங்கம்மா... அந்தப் பொம்பளையப் பாத்தா எனக்கே பயமா இருக்கு... அது வாயி நிறைய பாக்கப் போட்டுக்கிட்டு... அய்யய்யோ...”

நேஹா எதுவுமே சொல்லாமல் உள்ளே போய்விட, ஹரீஷ் கோபத்தில் கேட்டை மூடிவிட்டு உள்ளே சென்றான்.

மறுநாள்.

அவசரமாக மெயில் அனுப்பிக் கொண்டிருந்தவனை தொலைபேசியில் நேஹா அழைத்தாள்.
“சொல்லுமா...”

அவசர கதியில் நேஹா,

“ஹரி... நித்திஷ் ஜெர்ரிகூட விளையாடிட்டிருக்கும்போது ரோட்டுக்குப் போயிட்டான்...”

“அய்யய்யோ... அந்த கும்பல் ஏதும் பிரச்சனை பண்ணுச்சா?... அதுவரைக்கும் நீ என்ன பண்ணிட்டிருந்த?... “

“நான் பால்கனிலதான் இருந்தேன்... இப்ப ஏன் கத்துற?... ஒன்னும் பிரச்சனை ஆயிடல...... நித்திஷ் விளையாடிட்டிருந்தான்... ஒரு ஆட்டோ தெருவுக்குள்ள வேகமா வந்துச்சு... கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா ஆட்டோக்காரன் நித்திஷ்மேல இடிச்சிட்டு போயிருப்பான்... நீ சொல்லுவியே மூஞ்சியப் பாத்தாலே புடிக்கலைன்னு... அந்த லேடிதான் ஓடிப்போயி நித்திஷைத் தூக்கிக்கிட்டாங்க... பாவம் குழந்தை... அவங்க மட்டும் இல்லேன்னா, இந்நேரம் இவனைத் தூக்கிட்டு ஹாஸ்பிட்டல்லருந்துதான் கூப்பிட்டிருப்பேன்...

ஹரீஷ் ஒரு கணம் பேச்சே வராமல் இருந்தான்.


எப்படிப்பட்ட வெறுப்பையும் தாய்மை என்ற அந்த ஒரு மென்மையான, அழுத்தமான உணர்வு தகர்த்தெறிந்து விடுகின்றது...


Sunday 1 March 2015

ஏழாம் அறிவாய்க் காதல்!...

ஏழாம் அறிவாய்க் காதல்.

ஐந்து அறிவும் இயக்கத்தில் வீழ,
ஆறாம் அறிவு மயக்கத்தில் ஆழ,

ஏழாம் அறிவாய் இந்தக் காதல்
என்னுள் வந்ததை எப்படிச் சொல்வேன்?...

தந்தை தாயின் காதலில் பிறந்தேன்...
அந்தத் தாபமோ இந்தக் காதல்?...

விந்தும் நாதமும் சேர்ந்திடப் பிறந்தேன்...
அந்தப் பாவமோ இந்தக் காதல்?...

பருவக் காற்று மனதைச் சுழற்றும்
அருவச் சுழலோ இந்தக் காதல்?...

உருவந் தொலைத்து உயிரைக் கரைத்து
உருக்கிக் குடிக்கும் இந்தக் காதல்...

சித்தம் மொத்தம் நித்தம் முத்தம்
யுத்தம் செய்யும் இந்தக் காதல்.

ரத்தம் நித்தம் சத்தம் செய்யப்
பித்தம் செய்யும் இந்தக் காதல்

ஆசை இல்லா மாந்தர் தம்மில்
நேரக் கொடுமை இந்தக் காதல்

ஓசை இல்லா பூகம்பங்கள்
நேரக் கொடுமை செய்யும் காதல்...

இன்பம் தந்தே இம்சை செய்யும்
துன்பத் தேனாம் இந்தக் காதல்...

துன்பம் தந்தும் அன்பைச் சிந்தும்
இன்பத் தீயாம் இந்தக் காதல்...

கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும்,
உற்றே அறிய, ஐந்தே அறிவைக்,

கொண்டே மண்ணில் பிறக்கும்போதே
கொண்டேன் மனதை ஆறாம் அறிவாய்.

பாழாய்ப் போன ஆறாம் அறிவும்
பெண்ணே உன்னால் காணாதொழிய,

ஏழாம் அறிவாய் இந்தக் காதல்

என்னுள் வந்ததை எப்படிச் சொல்வேன்?...