Monday 29 December 2014

ஆண்மையும் பெண்மையும்


ஆண்மையும் பெண்மையும்
ஊஞ்சலாடும் கொஞ்சலிது

கொஞ்சலும் மிஞ்சலும்
குற்றமில்லா காலமது

காலமும் நேரமும்
கண்டுணரா யோகமிது

யோகமும் போகமும்
ஒன்றிணைந்த யாகமிது

யாகமே கர்மமாய்
யவ்வனத்தின் வேள்வியிது

வேள்வியின் சோதியில்
மூண்டெழுந்த மோக “மது”

மோகமும் தாபமும்
முனகலாக்கும் பெண்மையது

பெண்மையின் முனகலில்
அகம் அழியும் ஆண்மையிது...                (ஆண்மையும் பெண்மையும்)



சுவடுகள்

சுவடுகள்

“உன் பேரென்னம்மா?...”
“திவ்யா...”
“எத்தனாவது படிக்கிறீங்க?...”
“அஞ்சாவது...”
“இது யாரு?... உன் தம்பியா?... பேரென்ன?...”
“மாறன்... மூனாவது படிக்கிறான்...”
“சரி... இந்த டிராயிங்கை கையில வச்சிக்கிட்டு, நான் சொல்றத அப்படியே இந்தக் கேமராவைப் பாத்து சொல்லணும்... சரியா?... நல்லா கவனிச்சுக்க... “இந்த டிராயிங்க வாங்குனது மூலமா, முகப்பேர்லருந்து சவீதாக்கான்றவங்க எங்களுக்கு நோட்புக்கு, பேக்கு, ஜாமன்ட்ரி பாக்ஸெல்லாம் வாங்கிக் குடுத்துருக்காங்க... அவங்களுக்கு ரொம்ப நன்றி...” அப்படின்னு சொல்லணும்... சொல்லிடுவியா?...”
பெண்கள் எப்போதும் மனப்பாடம் செய்து கொள்வதில் ஆண்களைவிடத் திறமைசாலிகள். திவ்யா ஒரே மூச்சியில் நான் சொன்னதை அப்படியே சொன்னாள். கேமராவை ஆஃப் செய்தேன். அவள் தம்பி மாறன் சிரித்தபடியே கையில் நோட்டுப் புத்தகங்களைப் பிடித்துக்கொண்டு கேமராவைப் பார்த்து அதிசயித்தபடியே நின்றிருந்தான்.
இப்போது இந்த நிகழ்வு நடப்பதற்குக் காரணத்தை யோசிக்கிறேன்...
“மனுசனாப் பொறந்தவன், செத்ததுக்கப்புறம் அவன் பேர் சொல்றமாதிரி எதையாவது செஞ்சுட்டுப் போகணும். அட்லீஸ்ட், ஒரு மரத்தையாவது நட்டுட்டுப் போகணும்... என்று ஒரு திரைப்படத்தில் கேட்ட வசனம், திடீரென்று ஒரு நாள் என் மனதுக்குள் கேட்டது.
வீட்டுக்கொரு மரம் வளர்க்க நான் தயார், மரம் வளர்ப்பதற்கு வீடு வேண்டுமே... அதைத் தருவதற்கு யார் தயார்?... அதனால் மரம் வளர்க்கும் எண்ணத்தை அதற்கு மேல் வளர்க்க முடியாமல், வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்போது என் மனதில் தோன்றிய எண்ணம்தான் இது. 
எனக்கு அவ்வப்போது பொழுதுபோக்காய் ஓவியம் வரையும் பழக்கம் இருந்து வந்தது. ஒரு நாள் நண்பர் திருமணத்துக்கு அன்பளிப்பாய் என்ன வாங்குவது என்று தெரியாமல் இருந்தபோது, அவரது ஓவியத்தையே வரைந்து பரிசளித்தேன். மறுநாள் இன்னொருவர் தன் நண்பருக்குப் பரிசளிக்க அவரது ஓவியத்தை வரைந்து தரச் சொல்லிக் கேட்டார்.
நேரமில்லை என்று நான் சொல்ல, பணம் தருகிறேன் என்று அவர் சொல்ல, அட, இதுகூட நல்லாருக்கே... என்று நினைத்து, வரைந்து கொடுத்தேன். ஐநூறு ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தை எனக்காய் செலவு செய்து கொள்வதில் உடன்பாடில்லை. கலையால் கிடைத்த பணம், அந்த கலைமகளின் ஆணையாய் நினைத்து கல்விக்கே அர்ப்பணிக்க முடிவு செய்தேன்.
முகநூலில் ஒரு அறிவிப்பு விடுத்தேன், 
“ஒரு ஓவியத்தின் விலை ரூபாய் 500. அந்தப் பணமும் அடிப்படை வசதிகளே குறைவாக இருக்கும் குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தப்படும்... அந்த ஓவியத்தை வாங்கியதால் நன்மையடையும் குழந்தைகள் உங்களுக்கு நன்றி சொல்லும் காணொளியும் (வீடியோ) உங்கள் உள்பெட்டியில் பதிவேற்றம் செய்யப்படும்” என்று,
சில நட்புக்கள் கரம் கொடுத்தன. 

அதில் முதல் நட்பின் வேண்டுகோளின் பேரில் வரைந்த ஓவியம்தான் இது. இந்தப் பணம் காந்தி நகரில் ஒரு சேரியில் வசிக்கும் குழந்தைகளுக்காகச் செலவிடப்பட்டது. 
மனதுக்குள் ஏதோ ஒரு திருப்தி. 

இவ்வளவும் நான் எதிர்பார்த்தபடி நடந்தது. ஆனால் நானே எதிர்பாராத ஒன்று. 

இந்தச் செயலை நான் ஆரம்பித்த நாள் ஜூலை 15. காமராஜரின் பிறந்தநாள். 

நான் பரிசளித்ததும் அவரது ஓவியம்தான்.


Friday 12 December 2014

பாரதியின் கனவு

பாரதியின் கனவு

அன்பு நிலைத்திடச் சொன்னாய்நெஞ்சில்
     அச்சம் தவிர்க்கவே பாடல் புனைந்தாய்
இன்பம் தருவிக்கும் சொல்லால்நித்தம்
     ஈதலும் காதலும் வேதமும் சொன்னாய்.

மானம் உயர்வெனச் சொன்னாய்வீணில்
     மாந்தரில் பேதங்கள் ஏனென்றுரைத்தே
கானம் பலவற்றைத் தந்தாய்இன்றுன்
     கானங்கள் ஊமைகளானது ஏனோ?

தாய்மொழி நேசிக்கச் சொன்னாய்இன்று
     செந்தமிழ் என்றொரு சுந்தர மொழியோ
வாய்வழிச் சேதியென்றாச்சுதமிழ்
     பேசுதல் கீழென்ற சூழலுண்டாச்சு 

பள்ளித்தலமெங்கும் கோயில்என்று
     பாடிக் கனவுகள் கண்டதும் நீயே
அள்ளும் பணத்தினில் மட்டும்பள்ளி
     ஆலய உண்டியல் ஆனது ஏனோ?

மனிதர்க்கு உணவில்லை யென்றால்அன்று
     ஜகத்தினை அழித்திடப் பொங்கி யெழுந்தாய்
இனியந்தக் கோபங்கள் வேண்டாம்ஜகம்
     உழவின்றி உணவின்றி உயிரின்றிச் சாகும்.

மெச்சிப் புகழ்ந்திட்டபோதும்அந்த
     மொத்தக் கவிகளும் வீணாகலாச்சு.
துச்சமென்றே உந்தன் சொல்லைமனிதர்
     தூக்கி எறிந்தொரு நூற்றாண்டு ஆச்சு.


நல்லதோர் வீணை கிடைத்தேஅதன்
     நரம்பினைக் கொய்திட்ட மக்களின் தேசம்
சொல்லடி சக்தி மாகாளிஇன்னும்
     எத்தனை பாரதி வந்தால் திருந்தும்?...


நிஜம் நிழலாகிறது.

எப்போதும் பிசாசு போல் கறுப்பாய்ப் பின்தொடரும் நிழல் 
இருளின் கறுப்பில் இல்லாது போனாலும்,
அந்த இருளையே பிசாசாய் எண்ணி பயந்து வெளிச்சத்தைத் தேடி மீண்டும் நிழற்பேயுடன் ஒட்டி உறவாடிய பிள்ளைக் கணங்கள்.

சிலநாள் பார்வைகளையும், சிலநாள் ஸ்பரிசங்களையும்,
சிலநாள் கண்ணிர்த் துளிகளையும் காதல் என்று எண்ணிக்கொண்டு
நிஜமாய்த் தெரிந்த அத்தனைக் காதல்களும்(?) நிழலாய்ப் போனபின் அழுது துடித்த இளமைக் கணங்கள்.

“அந்தக் காலத்தில நாங்கள்லாம்” என்ற வார்த்தையை அடிக்கடிப் பயன்படுத்தும் முக்கால்கிணறு தாண்டிய வயது வரும்போது,
அடுத்த தலைமுறையின் சிறுவயதுப் பிழைகளைக் கண்டு
நம் இறந்த காலத்தையும் திருத்த முடியாமல்,
இந்தத் தலைமுறைகளின் நிகழ்காலத்தையும் திருத்த முடியாமல், எதிர்காலத்தைக் கரித்துக் கொட்டும் வயோதிகக் கணங்கள்...

வாழும் நாட்களில் எதையெதையோ வெளிச்சம் என்றெண்ணித் தேடித் தேடிக் கடைசியில் நிழலை மட்டுமே நீளமாக்கிக் கொண்டிருக்கும் இந்த மனதுக்கு எப்போதாவது புரிகிறது,

என் இந்த உடல் என்ற நிஜமும் ஓர் நாள் நிழலாகப் போகிறது என்று...
புரிந்து மட்டும் என்ன பயன்?.


சிரிக்காமல் போனேனா?... அழாமல் போனேனா?...


எண்ணங்கள் உன்னால் நாண...

எந்த அந்நியப்பெண்ணையும் ஏக வசனத்தில் அழைக்க விட்டதில்லை “நான்”

ஒன்றல்ல இரண்டல்ல, வாடா... போடா... என்று ஆயிரம் முறை சொல்லியிருப்பாய்...

காரணமே தெரியாமல் குழைந்து குழைந்து சிரிக்கின்றேன்.

இதுவரையில்

இறுமாப்பில் இருண்டு கிடந்த என் எண்ணங்கள்

உன்னால் நாண, வண்ணங்கள் பெறுதே...


கன்னத்தில் சின்னம் தந்தால்
வெட்கங்கள் வருதே.

வெட்கத்தை தூரம் தள்ளி.
உள்ளந்தான் கெடுதே.

உள்ளத்தை அள்ளித் தரவே
எண்ணங்கள் வருதே.

எண்ணங்கள் உன்னால் நாண,
வண்ணங்கள் பெறுதே...


அத்தனையும் மறந்தேன்...

உள்ளத்து உணர்வுகளை
ஒவ்வொன்றாய் சொல்லிப் பார்த்தேன்...
எல்லாச் சொல்லும் உன் பேராய் இருக்க,
எத்தனையோ சொல்ல வந்தவன்,
எதையுமே சொல்லாமல்
அத்தனையும் மறந்தேன்...

அன்பு ஒன்றுதான்

உயர்திணையோ, அஃறிணையோ
உயிர் ஒன்றுதான்.

நடந்தாலும் பறந்தாலும்
உடல் ஒன்றுதான்.

பல்லானாலும், அலகானாலும்
பசி ஒன்றுதான் – அறிவு

ஐந்தானாலும், ஆறானாலும்

அன்பு ஒன்றுதான்...

சிந்தித்தாலும், சந்தித்தாலும்

அடங்கா மனம் ஆர்ப்பரிக்க,
ஆற்றாமை கொப்பளிக்க,
சிந்தித்தாலும் சந்தித்தாலும்
அழுதாலும் அமைதியானாலும்
என் கடைசி அணுவையும் சுட்டெரிக்கும்,
உன் உறவின் சுகமும், பிரிவின் ரணமும்...

நீ இல்லாத தனிமையில்
நானே இல்லாத வெறுமையில்
சிந்தித்தாலும், சந்தித்தாலும்,
அழுதாலும், அமைதியானாலும்,
உன் ஒரு புன்னகை போதும்,

நான் மீண்டும் ஜனிக்க!...

Wednesday 3 December 2014

ஒரு தூரிகையின் கதை

ஒரு தூரிகையின் கதை

சும்மா இருப்பதற்கும் அசையாமல் இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
அவள் வேலை சும்மா இருப்பதல்ல. அசையாமல் இருப்பது. அவள் பெயர் தையல் நாயகி. இந்த மாதிரி பெயர்களை ஏன் இப்போது வைப்பதில்லை என்று நான் யோசிப்பதுண்டு. தையல் என்றால் பெண் என்று ஒரு அர்த்தம் உண்டு. பெண்களுக்கெல்லாம் நாயகி. என் அம்மா.

நான் படித்தது அரசுப் பள்ளியாக இருந்தாலும் அவ்வப்போது கிழிக்கப்படும் நோட்டுப் புத்தகங்கள், உடைக்கப்படும் ஜாமன்ட்ரி பாக்ஸெல்லாம் கேட்டு அழும்போது ஒவ்வொரு முறையும் திட்டிக்கொண்டே வாங்கித் தரும் அப்பா கூடவே வரும் போது கூடவே ஒரு சாக்லேட்டும் வாங்கித் தருவார்.

அந்த உயரமான கட்டிடத்தின் கட்டுமானப்பணியில் இருந்தபோது மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லி எல்லோரும் அழுது கொண்டிருந்தபோது நான்கு வயதுப் பையனாக நான் ஏன் இவர்கள் அழுகிறார்கள் என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

“அப்பா தூங்கிக்கிட்டிருக்காருப்பா...

என்று யாரோ சொல்ல, விவரம் தெரியாத நான் பந்தை எடுத்துக்கொண்டு மீண்டும் விளையாடப் போனது இன்னும் நினைவில் இருக்கிறது.

அன்று முதல் அம்மா வேலைக்குப் போக ஆரம்பித்தாள்.

கொஞ்சம் வளர்ந்தபின் கேட்டேன்.

என்ன வேலைக்கிம்மா போறீங்க?...

சும்மா ஒக்கார்ற வேலைதான் சாமி...

சும்மா ஒக்கார்றதா வேலை?... அதுக்கா சம்பளம் தர்றாங்க?...

தர்றாய்ங்களே...

சும்மாதான ஒக்காந்துருக்கீங்க... அப்புறம் ஏன் உங்களுக்கு முதுகு வலி, இடுப்பு வலில்லாம் வருதுன்னு சொல்றீங்க?...

அப்போது அவள் என்ன பதில் சொன்னாள் என்று தெரியவில்லை. வளர வளரத் தெரிந்தது.
அம்மா சென்றது ஒரு ஓவியக்கல்லூரி. சுற்றிப் பத்துப் பதினைந்து மாணவர்கள் தூரிகையில் அம்மா அழகான ஓவியமாகிக் கொண்டிருந்தாள்.

வகுப்பறையில் நாற்பத்தைந்து நிமிடங்கள் உட்கார்வதிலேயே சலிப்பாகும் நான், அம்மா வெறித்துப் பார்த்தபடி மணிக்கணக்காய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அடிமனதில் ஏதோ உறுத்தியது. சில நாட்களுக்குப் பின்,

போதும்மா... நான்தான் ப்ளஸ் டூ வந்துட்டேன்ல... நான் பார்ட் டைம்ல ஏதாவது வேலைக்குப் போறேன்... நீங்க தயவு செஞ்சு வீட்ல இருங்க...

முடியிற வரைக்கும் போகப்போறேன் சாமி...

சொன்னாலும் கேட்கப்போவதில்லை.

இன்று காலை ஏதோ சீட்டுக் கட்ட பணம் கேட்டுவிட்டுப் போனார்கள்.

சாயங்காலம் நிச்சயமாக் குடுத்துர்றேங்க...

என்று சொன்னாள்.

பள்ளி முடிந்து அந்த ஓவியக் கல்லூரிக்குச் சென்று பார்த்தேன். ஒவ்வொரு மாணவர்களின் காகிதத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இருந்தாள் அம்மா. அதில் ஒரு ஓவியம் மிகவும் அழகாக இருந்தது.

வரைந்து முடித்தார்கள்.

அம்மாவை அழைக்கச் சென்றேன். 

தொட்டேன். 

சரிந்தாள். 

அதுவரை கண் திறந்திருந்தவள் கண் மூடினாள்.

அதன்பிறகு என்ன நடந்ததெல்லாம் கனவு போல் இருந்தது.

இறுதியில் கல்லூரி நிர்வாகமும், மாணவர்களும் என் கையில் தந்த பணமும், அம்மா கட்டியிருந்த சீட்டுப்பணமும் சேர்த்துக் கட்டிய தொகையில் இன்று கல்லூரி வகுப்பறைக்குள் அமர்கிறேன்.

நான் இன்று அமர்வதற்காக, அவள் அத்தனை நாட்கள் அமர்ந்திருக்கிறாள்.

அவள் சும்மா உட்கார வில்லை. 

அசையாமல் உட்கார்ந்து அவள் அன்று செய்தது தவம்


தவம் செய்தது அவள். 

வரம் எனக்கு.