Wednesday 22 October 2014

ஒரு மழை நாள்

ஒரு மழை நாள்

    ஏன் இப்படியெல்லாம் நடக்கவேண்டும்? கையில் குடை இருந்தும், இப்போது மழை வராது என்று நானே முடிவு செய்து, ஓட்டலுக்குப் போகலாம் என்று ஏன் தோன்றியது? இப்போது கொட்டும் மழையில் ஒதுங்கவே இடமில்லாமல் நான் ஏன் அலையவேண்டும்? இந்த பதினோரு மணி ராத்திரியில ஓட்டலுக்குப் போனவன் அங்கேயே சாப்பிட்டு விட்டாவது வந்திருக்கலாம். சாப்பிடும் நேரத்தில் மழை வந்திருந்தால் கொஞ்சம் நேரம் அங்கேயே நின்றுவிட்டு வந்திருக்கலாம். அதையும் செய்யாமல் பார்சல் கட்டிக்கொண்டு, தண்ணீர் பாட்டலையும் வாங்கிக்கொண்டு உடனே கிளம்பினேன். எல்லாம் எதற்கு? இப்படி வரும் வழியில் கொட்டும் அடைமழையில் ஒதுங்கவே இடம் கிடைக்காமல் அலைவதற்கா? 

கொஞ்சம் தூரம் நடந்து, ஓடித் தேடியதில் கடைசியாக சின்னதாய் ஷீட் போட்ட பஸ் ஸ்டாண்டு போல் ஒரு இடம் தென்பட்டது. நான் ஒதுங்கிய இடம் ஒரு நீளமான மதில் சுவர். அதில் ஒரு மூன்று சதுர அடியில் ஒரு கிருஷ்ணர் சிலை பதித்து வைக்கப்பட்டு அதற்கு சிறிய அளவில் கம்பி போட்ட கதவு போட்டுப் பூட்டப்பட்டிருந்தது. வீட்டுச் சுவர்களில் விநாயகர் சிலை வைப்பார்களே அதுபோல். அங்கு ஒதுங்கி நின்ற போது என் மனதில் பட்ட கேள்விகளைத் தான் நான் இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறேன். 

நான் எப்போதும் கடவுளை மதங்களுக்குள்ளும், சிலைகளுக்குள்ளும் பார்ப்பதில்லை. உள் கடந்த ஒன்றாகத்தான் பார்க்கிறேன். சிலைகள், மதங்கள் எல்லாம் மனதை ஒருநிலைப்படுத்தத்தான் என்று நம்புபவன் நான்.

உலகையெல்லாம் காக்கும் ரட்சகன் நீ, உன் சிலையைக் காப்பாற்றிக் கொள்ள உன்னால் முடியாது என்று நினைத்து மனிதன் போட்டிருக்கும் இந்த கம்பிக் கதவைப் பார்க்கும்போது உனக்கு சிரிப்பு வரவில்லை? என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த கிருஷ்ணருடன் மனதுக்குள் பேச ஆரம்பித்தேன்.

எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குப்பா... 
என்று மேனேஜர் சொல்வது நினைவுக்கு வந்தாலும், என் கேள்விகள் மட்டும் நிற்கவில்லை. கம்பிக்குள் சிறை வைக்கப்பட்ட நீ, யாரைப் பாதுகாக்கப் போகிறாய்? நீயே சரணம் என்று வேண்டுபவர்களுக்கு இந்தச் சிறையைத் தாண்டி எந்த ரூபத்தில் போய் உதவப் போகிறாய்? 

சரி, யாரைப் பற்றியோ நான் ஏன் பேச வேண்டும்? என்னைப் பற்றிப் பேசுகிறேன்.

இப்படி வந்து சிக்கிக் கொண்டேனே, எனக்கு எந்த ரூபத்தில் வந்து உதவி செய்யப்போகிறாய்? 

இந்தக் கேள்விகளெல்லாம் எனக்குள் எழச்செய்து என்னை விரக்தியடையச் செய்யும் உன் நோக்கம்தான் என்ன?

என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த நான் ஒரு கணம் ஏதோ ஒரு குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்த சுவரின் மூலையில் பழைய துணிமூட்டை போல் ஏதோ கிடக்க, அதைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தேன். அது துணி மூட்டை அல்ல. ஒரு மூதாட்டி.

பூச்சி, புழு (சில நேரங்களில் பாம்பும்கூட) என்று வரையறையே இல்லாமல் எல்லா ஊர்வன எல்லாம் சரமாரியாக வந்துபோகும் இடத்தில் ஒரு கிழிந்த அழுக்குத் துணியை மட்டும் சுற்றிக்கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்திருக்கிறாள்.

யாரைப் பெற்ற தாயோ? ஆதரிக்க ஆளில்லாமல் இங்கு கிடக்கிறாள்.

அவள் ஏதோ முனகுவதைப் போல் இருந்தது. உற்றுக் கேட்டால் என்னிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

“என்னம்மா வேணும்?”

“ஐயா... சாப்பிட ஏதாவது இருந்தாக் குடுங்கய்யா...”

அத்தனை கேள்விகள் பொங்கியெழுந்த என் மனதில் இப்போது ஒரே ஒரு கேள்வி மட்டும்தான் மிஞ்சி நின்றது. 

இந்த மழையில், இந்த இரவில், ஒரு இளைஞன், நானே இவ்வளவு தூரம் நடந்து வந்து சாப்பிட சலித்துக்கொள்ளும்போது, அந்த மூதாட்டி என்ன செய்வாள்? என்ற ஒரே ஒரு கேள்வி.

“இந்தாங்கம்மா... தோசை இருக்கு... சாப்பிடுங்க... தண்ணி பாட்டில் கூட இருக்கு...”

“கிருஷ்ணா... நல்லாருப்பா...”

எனக்கு எந்த ரூபத்தில் வந்து உதவி செய்யப்போகிறாய் என்று உன்னைக் கேட்டேன். 

இப்போது புரிகிறது, உதவி தேவைப்பட்டது எனக்கல்ல, அந்த மூதாட்டிக்கு.

உதவியதும் நானல்ல.

என் ரூபத்தில் நீ!