Saturday 7 March 2015

மகளிர் தினம்


இந்து தர்மத்தில் பெண்ணை “சக்தி” என்றும், “சக்தியின் அம்சம்” என்று வழிபடுகிறார்கள்.
பிராணன் என்று சொல்லப்படும் உயிர்ச்சக்தியின் அம்சம் பெண்,
VITAL FORCE என்று அறிவியல் சொல்லும் சக்தியின் அம்சம் பெண்.
சக்தி இல்லையேல் எந்த இயக்கமும் வெளிப்படாது.
பெண் இல்லையேல் எந்த இயக்கமும் அவசியப்படாது.
சக்தியே செயலாகிறது.
சக்தியே பலனாகிறது.
எல்லா அசைவுகளும் சக்தியாலேயே நிகழ்கின்ரன.
நம் உடலை நாம் இயக்குவதற்கே சக்தி தேவை.
உலகில் விரவிக் கிடக்கின்ற சக்தியை ஒன்றிணைத்து ஒரு கம்பிக்குள் கொண்டு வந்தால் மின் சக்தி
மனதில் பரவிக் கிடக்கின்ற சக்தியை ஒன்றிணைத்து ஒரு கோட்டுக்குள் கொண்டு வருபவள் பெண் சக்தி
பெண்ணை பூமியின் ஒரு வடிவம் என்று புகழுரைக்கிறார்கள்.
பூமி எப்படி எல்லாப்பொருட்களையும் தன்னை நோக்கி ஈர்த்துக்கொள்கிறதோ,
அதே போல் பெண்ணும் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்தவள்.
இதில் இனமேதமே இல்லை...
ஆணோ, பெண்ணோ இரண்டையுமே ஈன்றெடுப்பது பெண்தான்.
மகளிர் தின வாழ்த்துக்களுடன்,
ராஜேஷ்குமார் ஜெயராமன்

Tuesday 3 March 2015

புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம்

    மாற்றங்கள் ஒன்றே உலகில் மாறாதவை. எந்த ஒரு படைப்பும் அதன் ஆரம்ப நிலையிலேயே இல்லாமல் அடுத்தடுத்த நிலைக்கு மாற்றியமைவதே பரிணாமம். அது தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் நிகழும். அது தனிமனிதராய் இருந்தாலும் சரி, இந்த உலகமே ஆனாலும் சரி. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

பரிணாமம் என்பதே மாற்றங்கள் என்றால் அது தானாகவே நிகழ்ந்து விட்டுப் போகிறது. அதை ஏன் நாம் செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்வி எழலாம். இந்த இடத்தில் மாற்றம் என்பதன் பொருள் முறைப்படுத்துதல் என்று பொருள்படுகிறது. ஒரு நதி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தைத் தானாகவே கடந்து சென்று கடலில் கலக்கும் என்பதும் இயற்கையாக நிகழும் மாற்றம். ஆனால் அந்த நதிக்கு அணையிட்டு வயலுக்குப் பாய்ச்சுதலே நாம் செய்ய வேண்டிய மாற்றம் ஆகும்.

ஒரு தனிமனிதன் குடும்பமாகி, குடும்பம் சமூகமாகி, சமூகம் ஊராக, ஊர் நாடாக, நாடே உலகமாகிறது. ஆக உலகம் என்று நாம் சொல்வது நம்மைச் சுற்றியுள்ள தனிமனிதர்களின் கூட்டத்தைத்தான். இது ஒரு சுழற்சி. உலகைப் புதியதாக்குவதற்கு முதலில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் புதுப்பிக்க வேண்டும். தன்னைப் புதுப்பித்தல் என்பது முதலில் தன்னைப் புரிதல் என்பதிலிருந்தே தொடங்குகிறது. இந்த உலகில் ஜனிக்கும் அத்தனை உயிர்களுக்கும் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் வாழ்க்கை என்பது பொதுவானது. அத்தியாவசியத் தேவைகள் என்பது ஒன்றுதான். ஆசைகள், தேவைகள் என்று எதையெல்லாம் நாம் எதிர்நோக்கி வாழ்கிறோமோ, அது அத்தனையும் மற்றவர்களுக்கும் உண்டு என்ற எண்ணம் எப்போது வருகிறதோ அப்போதுதான் அந்தப் புரிதல் நிகழும். அப்போதுதான் மனிதம் புதுப்பிக்கப்படும். உலகமும் புதுப்பிக்கப்படும்.

புதியதோர் மனிதம் செய்வோம்!


புதியதோர் உலகம் செய்வோம்!

பெண்மையும் மென்மையும்

பெண்மையும் மென்மையும்

      வாசலில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஜெர்ரி குரைப்பதைக் கேட்டபோதுதான், கேட்டை திறந்தபடியே விட்டுவிட்டு வந்தது ஹரீஷுக்கு ஞாபகம் வந்தது. வேகமாக வாசலுக்கு ஓடினான். எது நடக்கக்கூடாது என்று நினைத்து ஓடினானோ அதுவே நடந்திருந்தது. 

அந்தத் தெருவோரத்தில் நரிக்குறவர் கும்பல் ஒன்று சமீபகாலமாக ஆக்ரமித்திருந்தது. அந்த கும்பலைச் சேர்ந்த சிறுவர்கள் சில நேரங்களில் விளையாட்டிக்கொண்டே வீட்டு வாசலுக்கு வந்து நின்று கொண்டிருப்பது ஹரீஷுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. எவ்வளவோ விரட்டிப் பார்த்தும் மீண்டும் மீண்டும் அங்கேயே வந்து கொண்டிருந்தார்கள். இது பெரிய தொல்லையாக இருந்தது. அந்தச் சிறுவனை சத்தமில்லாமல் மிரட்டி வெளியே அனுப்பினான். அந்த நேரத்தில் உள்ளேயிருந்து நேஹா வர,

“இதோ பாரு நேஹா... அதுங்க இம்சை தாங்க முடியல... வாசல்ல காரை நிறுத்த முடியல... சாயந்திரம் ஒரு ஷட்டில் கார்க் விளையாட முடியல... கம்முனு போலீஸ்ல கம்ப்ளையிண்ட் பண்ணப்போறேன்...”

“என்னன்னு கம்ப்ளையிண்ட் பண்ணப்போற ஹரி?... அவங்க உன்னை என்ன பண்ணாங்க?... ஏதோ நாடோடிப் பொழப்பு பொழக்கிறவங்க... அங்கங்க கொஞ்ச நாள் இருந்துட்டு அப்படியே போயிடப்போறாங்க... அவங்க மேலப் போயி கம்ப்ளையிண்ட் குடுக்குறேன், அது இதுன்னுட்டு... போயி வேலையப் பாரு...”

நேஹாவுக்கு இது ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை.

“நான் ஆபீஸ் போயிட்டதுக்கப்புறம் நீதான் வீட்ல இருக்கப்போற நேஹா... அப்புறம் அவங்க இது பண்ணிட்டாங்க... அது பண்ணிட்டாங்கன்னுல்லாம் ஏதாவது சொன்னேன்னா, அவ்வளவுதான்... அன்னக்கி அப்படித்தான், நித்திஷ் கார்லருந்து கையில பலூனை வச்சிக்கிட்டு  இறங்குறான்... அந்தப கும்பல்லருந்து ஒரு பையன் பலூனையே உத்துப்பாத்துட்டு கிட்ட வர்றான்... அவனைப் பாத்துட்டு குழந்தை பயப்பட்றான்....அதுவும் ஒரு பொம்பள இருக்கே, அவங்கம்மா... அந்தப் பொம்பளையப் பாத்தா எனக்கே பயமா இருக்கு... அது வாயி நிறைய பாக்கப் போட்டுக்கிட்டு... அய்யய்யோ...”

நேஹா எதுவுமே சொல்லாமல் உள்ளே போய்விட, ஹரீஷ் கோபத்தில் கேட்டை மூடிவிட்டு உள்ளே சென்றான்.

மறுநாள்.

அவசரமாக மெயில் அனுப்பிக் கொண்டிருந்தவனை தொலைபேசியில் நேஹா அழைத்தாள்.
“சொல்லுமா...”

அவசர கதியில் நேஹா,

“ஹரி... நித்திஷ் ஜெர்ரிகூட விளையாடிட்டிருக்கும்போது ரோட்டுக்குப் போயிட்டான்...”

“அய்யய்யோ... அந்த கும்பல் ஏதும் பிரச்சனை பண்ணுச்சா?... அதுவரைக்கும் நீ என்ன பண்ணிட்டிருந்த?... “

“நான் பால்கனிலதான் இருந்தேன்... இப்ப ஏன் கத்துற?... ஒன்னும் பிரச்சனை ஆயிடல...... நித்திஷ் விளையாடிட்டிருந்தான்... ஒரு ஆட்டோ தெருவுக்குள்ள வேகமா வந்துச்சு... கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா ஆட்டோக்காரன் நித்திஷ்மேல இடிச்சிட்டு போயிருப்பான்... நீ சொல்லுவியே மூஞ்சியப் பாத்தாலே புடிக்கலைன்னு... அந்த லேடிதான் ஓடிப்போயி நித்திஷைத் தூக்கிக்கிட்டாங்க... பாவம் குழந்தை... அவங்க மட்டும் இல்லேன்னா, இந்நேரம் இவனைத் தூக்கிட்டு ஹாஸ்பிட்டல்லருந்துதான் கூப்பிட்டிருப்பேன்...

ஹரீஷ் ஒரு கணம் பேச்சே வராமல் இருந்தான்.


எப்படிப்பட்ட வெறுப்பையும் தாய்மை என்ற அந்த ஒரு மென்மையான, அழுத்தமான உணர்வு தகர்த்தெறிந்து விடுகின்றது...


Sunday 1 March 2015

ஏழாம் அறிவாய்க் காதல்!...

ஏழாம் அறிவாய்க் காதல்.

ஐந்து அறிவும் இயக்கத்தில் வீழ,
ஆறாம் அறிவு மயக்கத்தில் ஆழ,

ஏழாம் அறிவாய் இந்தக் காதல்
என்னுள் வந்ததை எப்படிச் சொல்வேன்?...

தந்தை தாயின் காதலில் பிறந்தேன்...
அந்தத் தாபமோ இந்தக் காதல்?...

விந்தும் நாதமும் சேர்ந்திடப் பிறந்தேன்...
அந்தப் பாவமோ இந்தக் காதல்?...

பருவக் காற்று மனதைச் சுழற்றும்
அருவச் சுழலோ இந்தக் காதல்?...

உருவந் தொலைத்து உயிரைக் கரைத்து
உருக்கிக் குடிக்கும் இந்தக் காதல்...

சித்தம் மொத்தம் நித்தம் முத்தம்
யுத்தம் செய்யும் இந்தக் காதல்.

ரத்தம் நித்தம் சத்தம் செய்யப்
பித்தம் செய்யும் இந்தக் காதல்

ஆசை இல்லா மாந்தர் தம்மில்
நேரக் கொடுமை இந்தக் காதல்

ஓசை இல்லா பூகம்பங்கள்
நேரக் கொடுமை செய்யும் காதல்...

இன்பம் தந்தே இம்சை செய்யும்
துன்பத் தேனாம் இந்தக் காதல்...

துன்பம் தந்தும் அன்பைச் சிந்தும்
இன்பத் தீயாம் இந்தக் காதல்...

கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும்,
உற்றே அறிய, ஐந்தே அறிவைக்,

கொண்டே மண்ணில் பிறக்கும்போதே
கொண்டேன் மனதை ஆறாம் அறிவாய்.

பாழாய்ப் போன ஆறாம் அறிவும்
பெண்ணே உன்னால் காணாதொழிய,

ஏழாம் அறிவாய் இந்தக் காதல்

என்னுள் வந்ததை எப்படிச் சொல்வேன்?...

Friday 27 February 2015

ஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள்.

ஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள்.

என் பேரு ஈஸ்வரி. ஏழாவது படிக்கிறேன். நான், சிந்து, கலைவாணி எல்லாரும் நடந்துதான் போவோம். வெயில்காலத்துல ஆத்துல தண்ணி கம்மியா இருந்தா ஆத்துக்குள்ளயே இறங்கி நடந்து போயிரலாம், ரொம்ப பக்கம். தண்ணி ஜாஸ்தியா இருந்தா, ரோட்டு வழியா முக்கா மணி நேரம் நடந்து போகணும். ஆனா, ஆத்த ஒட்டியே சின்ன காட்டு வழி இருக்கு. அந்தப் பக்கம் போனா, எங்கம்மா திட்டுவாங்க. துணைக்கி சிந்து, கலைவாணில்லாம் வர்றாங்கன்னு சொல்லுவேன், மூஞ்சிய கோவமா வச்சிக்கிட்டே, சொல்ற பேச்சை கேக்குதா பாரு. அராத்துன்னு திட்டிட்டு போயிருவாங்க.

இதே சாக்குல சிலநாள் என் பிரண்ட்ஸ் வரலேன்னாக்கூட நான் நைசா ஆத்து வழியாதான் போயிருவேன். கொஞ்சம் பயமாத்தான் இருக்கும், ஆனாலும் கொஞ்ச நடந்து வந்தா சூசையண்ணன் துணி துவைச்சிட்டிருப்பாரு. பக்கத்துல பியூலாக்கா துணி காய வச்சிட்டிருப்பாங்க, அவங்களோட மூனு வயசுல குட்டிப்பையன் இமான் பக்கத்துலயே விளையாடிட்டிருப்பான். அவங்ககிட்ட பேசிட்டே போயிருவேன்.

எப்பவாவது ஆத்துப்பக்கம் போனேன்னு தெரிஞ்சுருச்சுன்னா எங்கம்மா கரண்டியக் காய வச்சு. முட்டிக்குக் கீழ அடிப்பாங்க. நான் நீச்சலடிக்க ஆசைப்பட்டுத்தான் ஆத்துப்பக்கம் போறேன்னு அவங்களுக்குத் தெரியும். அந்த மகேசு பையன் நீச்சலடிக்கிறான்னா, அவன் ஆம்பளைப் பையன், பொட்டப்புள்ள, உனக்கு என்னடி ஆசை அவன்கூட போட்டி போட்றன்னு கேட்டு அடிப்பாங்க. அவங்க சொன்னமாதி அந்த மகேஸ் நீச்சல் அடிக்கிறதப் பாத்தா எனக்கு கால், கையெல்லாம் பரபரன்னு இருக்கும். அவன்கிட்ட எனக்கும் நீச்சல் கத்துக்குட்ரான்னு கேட்டதுக்கு, நீயெல்லாம் தண்ணில நீச்சலடிக்கணும்னு ஆசப்படாத ஈசு... தரையில அடிக்கிறதோட நிறுத்திக்கன்னு கிண்டல் பண்ணுவான். எட்டாவது போறதுக்குள்ள நான் நீச்சலடிப்பேன்டான்னு அவன்கிட்ட சவால் விட்டேன். அவன் கிண்டலா சிரிச்சுக்கிட்டே தண்ணிக்குள்ளயே ஒரு பல்டி அடிச்சு, வாய் நிறைய தண்ணியை ரொப்பி புஸ்வாணம் மாதிரி துப்புனான். அவன் கிண்டல் பண்றதக் கூட மறந்து அவன் துப்புனதையே பார்த்துக்கிட்டிருந்தேன். அப்பவே நானா இறங்கிக் கத்துக்கலாம்னு நெனப்பேன், எங்கம்மா கரண்டியோட கண்ணு முன்னாடி வருவாங்க. லேசா பயமாவும் இருக்கும்.

தினமும் பொழுது விடிஞ்சதுமே நானும் அவன மாதியே தண்ணிக்குள்ள பல்டியடிச்சு நீச்சல் அடிக்கிற மாதியே கற்பனை பண்ணிப் பாப்பேன். ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

இன்னையோட ஏழாவதுக்கு முழுப்பரிட்சை முடியிது. என் பிரண்ட்ஸெல்லாம் முன்னாடியே போயிட்டாங்க. நான் மட்டும்தான் நடந்து போனேன். ஆத்தைப் பாத்தவுடனே நின்னுட்டேன். கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டே இருந்தேன். என்னமோ மாதி இருந்துச்சு. ஒரு மாசம் லீவு முடிஞ்சா எட்டாவதும் போயிருவேன். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

அப்ப திடீர்னு யாரோ அலறுற மாதி சத்தம் கேட்டுச்சு. திரும்பிப் பாத்தா, பியூலாக்கா இமானு,  இமானுன்னு சத்தம் போட்டு இடுப்பைப் புடிச்சுக்கிட்டே வேகமா நடந்து வந்துட்டிருந்தாங்க. பாவம் அவங்க வயித்துல பாப்பா இருக்கு. அவங்களால ஓட முடியல. என்னன்னு ஓடிப்போயி பாத்தா, இமானு தண்ணிக்குள்ள விழுந்துட்டான். கையக் கால ஆட்டிட்டே அம்மா, அம்மான்னு கத்திட்டிருந்தான். சுத்தி சுத்திப் பாத்தேன், சூசை அண்ணன் அங்க இல்ல, வேற யாரையும் காணோம். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. பியூலாக்கா இடுப்பைப் பிடிச்சுக்கிட்டு கரையிலயே ஒக்காந்துகிட்டு இமானைப் பாத்து கண்ணு, இங்க வா கண்ணுன்னு கைய நீட்டிக்கிட்டிருந்தாங்க. ஆனா இமானு தண்ணில மிதந்துக்கிட்டே கொஞ்சம் தள்ளித் தள்ளிப் போயிட்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம் தள்ளி அவன் கையில எப்பவும் விளையாட்ற பொம்மை மிதந்துக்கிட்டிருந்துச்சு. பியூலாக்காவுக்கு இடுப்பு வேற வலிச்சுதுன்னு நினைக்கிறேன். அவங்களால எந்திரிச்சு நடக்க முடியல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.

பாத்தேன்.

ஓடிப்போயி எகிறி ஆத்துக்குள்ள குதிச்சேன்.

எனக்கு எல்லாம் கனவு மாதி இருந்துச்சு. நான் பறந்து போயி ஆத்துல விழுந்தேன். விழுந்த வேகத்துல தண்ணி தெறிச்சுது. நானும் தண்ணிக்குள்ள போயிட்டேன். தண்ணி என்னை உள்ள இழுத்துச்சு. தண்ணிக்குள்ள விழுந்தா என்ன பண்ணணும்னு எங்கப்பா சொன்னது ஞாபகம் வந்துச்சு. அவரு சொன்னமாதியே கையக் கால வேகமா ஆட்டுனேன். தண்ணி என்னை இழுத்துக்கிட்டே இருந்துச்சு. வாய்க்குள்ள, மூக்குக்குள்ளல்லாம் தண்ணி போச்சு, முட்டை முட்டையா வந்துச்சு. கஷ்டப்பட்டு மூச்சை அடக்கிக்கிட்டேன். மறுபடியும் மறுபடியும் கைய, கால அடிச்சேன். மகேசு என்னை கிண்டல் பண்ணது, பொட்டபுள்ள உனக்கென்னடி ஆசைன்னு அம்மா திட்டுனது, எனக்கு ஏழாவது பரிட்சை முடிஞ்சது எல்லாம் ஞாபகம் வந்துச்சு. பல்லக் கடிச்சுக்கிட்டு மறுபடியும் மறுபடியும் கை, கால அடிச்சேன். கடைசியா கொஞ்சம் கொஞ்சம் தண்ணிக்குள்ளருந்து மேல வந்தேன். மறுபடியும் இழுக்குற மாதி இருந்துச்சு. விடாம மறுபடியும் கை, கால வேகமா ஆட்டிக்கிட்டே இருந்ததுல தண்ணிக்குள்ளருந்து மேல வந்தேன். அப்பதான் தெரிஞ்சுது, நான் தண்ணிக்குள்ள முழுகாம மேலயே நிக்கிறேன்னு. அப்படியே கால ஆட்டிக்கிட்டே தண்ணிக்கு மேல வந்து தலைய மட்டும் வெளிய வச்சுக்கிட்டு சுத்தி சுத்திப் பாத்தேன். கரையில உக்காந்துக்கிட்டு பியூலாக்கா என்னையும் இமானையும் மாத்திப் பாத்துக்கிட்டு ஐயோ, ஐயோன்னு கத்திக்கிட்டிருந்தாங்க. இமான் ஒரு பக்கம் மிதந்துக்கிட்டிருந்தான். நான் அப்படியே கை, காலால தண்ணியை பின்னால தள்ளிவிட்டேன். தண்ணி பின்னால போச்சு, நான் முன்னால போனேன். நான் போகப்போக இமானும் மிதந்துக்கிட்டே தள்ளித் தள்ளிப் போனான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இமான்கிட்ட போயிட்டேன். அவன் அழுதுகிட்டே துடிச்சுட்டிருந்தான். ஒருவழியா அவங்கிட்ட வந்துட்டேன். வேளாங்கண்ணிக்கு வேண்டுதலுக்காக அவன் தலையில விட்டிருந்த முடியை கொத்தா புடிச்சேன். ஒரு கையில அவனைப் புடிச்சு இழுத்துக்கிட்டே கரைப்பக்கம் திரும்பி இன்னொரு கையால தண்ணியைத் தள்ளுனேன். கொஞ்சம் கொஞ்சமா கரைப்பக்கம் போனேன். கரைக்கிட்ட வந்ததும் கரையைப் புடிச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் மூச்சு வாங்குனேன். என்னைப் பாத்துட்டு பியூலாக்கா எந்திரிச்சு கஷ்டப்பட்டு ஓடிவந்தாங்க. இமான் அழுதுகிட்டே இருந்தான். அவனைத் தூக்கி கரையில உக்கார வச்சேன். பியூலாக்கா ஓடிவந்து இமானை வாங்கிட்டே, ஏசப்பா... என்ன கண்ணுன்னு சொல்லிட்டே இமானைக் கட்டிப்புடிச்சுக்கிட்டாங்க. நல்லவேள அவனுக்கு ஒன்னும் ஆகல. ஆனா பயத்துல அழுதுக்கிட்டு மட்டும் இருந்தான்.

மறுபடியும் ஆத்தைப் பாத்தேன். இமானோட பொம்மை மிதந்துக்கிட்டிருந்துச்சு. அந்த பொம்மையப் பாத்துக்கிட்டே கையக் கால அடிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கிட்ட போனேன். பொம்மைய எடுத்தேன். மறுபடியும் அதே மாதியே கரையப் பாத்து வந்தேன். பொம்மைய கரையில வச்சேன். கொஞ்சம் நேரம் மூச்சு விட்டேன். அப்பதான் நிமிந்து பாத்தா, கொஞ்ச தூரத்துலருந்து ஓடிவந்த மகேசு, கரையில நின்னுக்கிட்டு அதிர்ச்சியாகி கண்ணு ரெண்டையும் முழிச்சு மிரண்டு போயி என்னைப் பாத்தான். அவனைப் பாத்து சிரிச்சேன். ஏய், ஈசு, தண்ணிலயா குதிக்கிற? இரு, இரு, உங்கம்மாட்டயே சொல்றேன்னு சொல்லிட்டு ஓடுனான். நான் அதைப் பத்திக் கவலைப் படல.
மெதுவா கரையில ஏறி ஒக்காந்தேன். என்னால நம்பவே முடியல. நானும் நீச்சலடிச்சேன். இதே ஆத்துல. தலையிலருந்து தண்ணி நெத்தி, மூக்கு, வாய் வழியா வழிஞ்சுது. தண்ணிய ஊதுனேன். தெறிச்சுது.

பின்னாடி திரும்பிப் பாத்தா, சூசையண்ணன் ஓடிவந்தாரு. புள்ளைய ஆத்துக்குள்ள விட்டுட்டு நீ என்னடி பண்ணிட்டிருந்தன்னு கேட்டாரு. நான் என்னத்தைக் கண்டேன், பொம்மைய எடுக்கப் போறேன்னு தண்ணிக்குள்ள விழுவான்னா எனக்கெப்படித் தெரியும், அந்தப் புள்ள இருக்கப்போயி குதிச்சு தூக்கிட்டு வந்தானு என்னைக் காட்டினாங்க. என்கிட்ட ஓடிவந்த சூசையண்ணன் என் நெத்தியில முத்தம் குடுத்தாரு. மறுபடியும் போயி இமானைத் தூக்கிட்டு போனாரு. பியூலாக்கா அவரு பின்னாடியே போயிட்டாங்க.

மறுபடியும் ஆத்தப் பாத்தேன். இவ்வளவு நாளா என் கண்ணு நிறைய பெரிசா தெரிஞ்ச ஆறு, இப்ப என் காலுக்கு கீழ அமைதியா இருக்கு. இப்ப இந்த ஆத்தைப் பாத்தா எனக்கு பயமாவே இல்ல.

என் டிரஸ்ஸெல்லாம் தண்ணி, மொத்தமா நனைஞ்சுட்டேன். இருக்கட்டுமே!...

நிறைய தண்ணிவேற குடிச்சுட்டேன். இருக்கட்டுமே!...

குதிச்சதுல தண்ணிக்கடியில இருந்த முள்ளுல குத்திக் கட்டை விரலுல லேசா ரத்தம் வந்துச்சு. இருக்கட்டுமே!...

தூரத்துல பாத்தேன். எங்கம்மா கரண்டியோட ஓடி வந்துட்டிருந்தாங்க. பின்னாடி மகேசும் வந்துட்டிருந்தான்.


இருக்கட்டுமே!... 



Friday 20 February 2015

வேர் தேடும் நீர்

வேர் தேடும் நீர்

நான் மனித நேயம் பேசுகிறேன்...
எனக்கு மனித மனங்களில் இடம் கிடைக்கவில்லை... தற்போது புத்தகங்களில் மட்டும் சிறை வைக்கப்பட்டுள்ளேன்.
எத்தனையோ படைப்புக்களில் மனிதப் படைப்பும் ஒன்று.
ஐந்து அறிவுகளை பகுத்துப் பார்ப்பதற்கான கூடுதல் அறிவைப் பெற்ற ஒரு ஐந்து.
ஆறு அறிவுகளை விரலால் எண்ணிப் பார்த்த இந்தப் பிறவி,
அந்த ஆறாம் அறிவை மனதால் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டது...
எனக்குத் தெரிந்த வரையில் மனிதனுக்கும்,
அவன் சொல்லும் மற்ற ஐந்து அறிவு ஜீவன்களுக்கும் இருக்கும் வித்தியாசம்...
உணவை வேகவைத்துத் தின்பதிலும்,
உடைகளையும், உறைவிடத்தையும் பகட்டாக்கிக்கொள்வதிலும்,
இறுதியாக இறந்த பின்புகூட தன்னைச் சுற்றிக் கல்லறை கட்டிக்கொள்வதிலும்தான்...
இதைத் தவிர மனிதன் என்று சொல்லிக்கொள்ள, எந்தத் தகுதியையும் இது வளர்த்திருக்கவில்லை.
ஆக மொத்தம்...
மனிதா... நீயும் ஒரு ஜந்துதான்.
மனிதத்தன்மை அற்றவரை மிருகம் என்று சொல்வதை இனி நிறுத்திக்கொள்.
மிருகத்துக்கு அன்பு காட்ட மட்டும்தான் தெரியும்
அன்பு காட்டுவதுபோல் நடிக்கத் தெரியாது.
தன்னைக் காத்துக்கொள்வதற்காகப் பிற உயிர்களைக் கொல்லத் தெரியும்.
உன்போல் பிறரை அழிப்பதற்காகத் தன்னைக் கொல்லத் தெரியாது.
விரோதம் தெரியும். துரோகம் தெரியாது.
மகாத்மா காந்தி ரோடு, காமராஜர் சாலை, பாரதியார் நகர், வ.உ.சி தெரு என்று, உனக்கு வழிகாட்ட வந்தவர்களையெல்லாம்
நெஞ்சில் வைத்துக்கொள்ள நேரமில்லாமல்,
தெருவோடு நிற்க வைத்தது போதும்...
இப்போதாவது என்னை ஏற்றுக்கொள்.
என்னால் மட்டுமே உனக்கு அமைதி கிடைக்கும்...
நான் இல்லாமல் உன் பிறவிக்கு வாழ்க்கையும் இல்லை.... வரலாறும் இல்லை...
இப்படிக்கு,
மனித நேயம்...

ஓசையின்றி உரசி,,,

ஓசையின்றி உரசி 
உயிரில் உறைந்து.
ஓரணுவும் மீதமின்றி,
உள்ளம் நிறைந்து,
அவன் உப்புக்காகிதக் கன்னத்தில்
அவள் நித்தம் பொழிந்த சின்னத்தில்
காலம் மறந்து நாணம் துறந்து
கற்பின் இலையில் காதல் விருந்து.
விருந்தைச் சுவைத்த ஏகாந்த கணங்கள், 
அருந்திக் கிடைத்த ஆனந்த ரணங்கள்.
ஸ்தூலத்தில் நீரெழுத்தாய்க் கலைந்திட,
சூட்சுமத்தில் கல்லெழுத்தாய் நிலைத்திட
உயிரின் உறவுக்காய்
இடம் தந்த வயல்வெளி !
உறவின் மகிழ்வுக்காய்
இதம் தந்த மணல்வெளி !
இடைவெளிகள் ஏதுமின்றிக்
இதழ் சொன்ன சேதிகளை


காற்றுடன் தலையசைத்து
கதை பேசும் புல்வெளி !

Sunday 8 February 2015

எங்கே அவள்?...

கொய்யாக் கனியவள் கொய்த என்மனத் துயரை
நைய்யாண்டி செய்குதோ சடையும் பின்னிடையும்
கையிருந்த கரும்புவில் காமன் கதறப் புருவமாகி
எய்தனள் ஓர் அம்புப் பார்வை இருவிழியால் எனைநோக்கி,

நோக்கிச் சென்றுவிட்டாள், நோகாமல் அந்தக் கன்னி
பாக்கியேதும் வைத்திராமல் பாவச்சேறு பட்ட என்னுடல்
ஆக்கி வைத்திருந்ததோ அள்ளவொண்ணா ஆணவச்சோறு
தாக்கின இஃதையெல்லாம் அத்தாரகை எய்த அம்பு.

அம்பினால் புண்ணியனாகி, அவள் அன்பினால் கண்ணியனாகி – ஓர்
வம்புக்கும் செல்லாதெந்தன் வாழ்வுக்கு வாழ்வு வர,
செம்புலம் நானானேன், சேர்ந்தவள் மழையாகி
எம்பிரான் ஆக்கம்போல் எனைச் செய்தாள் மையோடு,

மையோடு மலர்க்கொண்டு மலர்க்காணாத் தேன்கொண்டு
பொய்யாத மணம்கொண்டு போனாளே எனைக்கொண்டு
ஐயோ இது மெய்யோவென ஆனந்தம் ஊற்றெடுக்கப்
பொய்யென்று சொல்லிப்போனாள், போனவளைக் காணவில்லை.


Wednesday 4 February 2015

தாஜ்மகால், புகைவண்டி, நீ, நான்



தாஜ்மகால், புகைவண்டி, நீ, நான்
“இதே இடத்துலதான் முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஷரோவை மொத மொதல்ல பாத்தேன்...”
அம்மாவை அப்பா அப்படித்தான் கூப்பிடுவார். இங்கே உட்கார்ந்திருப்பவர் என் அப்பா. நின்று கொண்டிருப்பது நான். அப்பா சலீம் கௌஸ். வேலை தேடி ஆக்ராவிற்கு வந்தவர். அம்மா ஷர்தா. பஞ்சாப்பிலிருந்து வந்து ஆக்ராவில் குடியேறிய பாரம்பர்யமான சீக்கியக் குடும்பம்.
அந்த நேரத்தில்தான் எங்கோ நடந்த ஒரு இந்து முஸ்லீம் கலவரத்தின் பாதிப்பால் யாரோ சிலர் அப்பாவை இதே ரயிலிருந்து அடித்துக் கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள். காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இதே தாஜ்மகாலின் அருகில்தான். அப்பா அம்மாவின் சந்திப்பு நிகழ்ந்தது. அப்பாவின் மொத்தக் கதையும் சித்தி மூலமாக எனக்குத் தெரிந்திருந்ததால் அவரின் ஒரு சில பார்வைகளுக்கு எனக்கு அர்த்தம் புரியும். இப்போது அம்மாவை நினைத்தபடி அந்த இடத்தைப் பார்க்கும் அப்பாவின் மனதில் இருந்த வார்த்தைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
“எல்லாரும் பயந்து போய் சுத்தி நின்னு வேடிக்கை பாத்தாங்க, ஷரோதான் செயினை இழுத்து வண்டிய நிறுத்துனா.... அவ பண்ண அந்தக் காரியம்தான் இந்த உலகத்துல மனுஷத்தன்மை இன்னும் சாகலன்னு எனக்குப் புரிய வச்சுது...”
அந்த நொடியே அம்மாவின்மேல் வந்த காதல்தான் அவரை இதே ஊரில் ரயில்வேயில் வேலை தேடிக்கொண்டு இங்கேயே இருக்க வைத்தது. ஆனாலும், அம்மாவின்மேல் அப்பாவுக்கு வந்த அளவுக்கு, அம்மாவுக்கு காதல் வந்து விடவில்லை. சரியாகச் சொன்னால் அம்மாவின் மதம் காதலை வரவிடவில்லை. ஆனாலும் அப்பா மட்டும் காதலை விடவில்லை.
இதனால் அம்மா வீட்டார் ஆத்திரத்தில் அப்பாவின்மீது கொலை முயற்சி வரை போயிருக்கிறார்கள்.
ஒருமுறை இந்த ரயிலில் அம்மா தனியாக வந்து கொண்டிருந்தபோது அம்மாவைப் பார்த்த பரவசத்தில் அப்பா பேசவரும்போது எதிர்பாராமல் அப்பா தவறி ரயிலிலிருந்து விழப்போக, மின்னல் வேகத்தில் கையைக் கொடுத்த அம்மா தொங்கிக் கொண்டிருந்த அப்பாவிடம் தன்னைக் காதலிப்பது அவருக்கு ஆபத்து என்பதை உணர்த்தும் வகையில்,
“உங்க உயிர்மேல உங்களுக்கு ஆசையே இல்லையா?... ஏன் இப்படி பண்றீங்க?...”
அம்மாவின் கையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த அப்பா,
“இந்த உயிரு இன்னும் இருக்கதுக்கு காரணம் நீதான்... அது இனிமேலும் இருக்குறதும் இல்லாததும் உன் கையிலதான் இருக்கு... இதுக்கு மேலயும் உனக்கு விருப்பம் இல்லன்னா, நான் விட்டுட்றேன்... உன்னையும்... உன் கையையும்...”
என்று அம்மாவின் கையை விடப்போனதுதுதான் அம்மாவுக்கு அப்பாவின்மேல் மதங்களைத் தாண்டிய காதல் வந்த காரணம். அப்போதும் சாட்சியாக இருந்தது இந்தத் தாஜ்மகால்தான். அதற்குப் பின் பல தடைகளை மீறி அந்தக் காதலர்கள் கணவன் மனைவியாகித் தங்கள் காதலைத் தொடர்ந்தார்கள்.
“ஷரோ... உன் ஆசைப்படி ரிட்டையர்டாகுறதுக்குள்ள, நான் கீழ்மட்டத்துல தொழிலாளியா வேலை பார்த்த இதே ரயில்வேலயே என் கண்ணு முன்னாடி நம்ம பையனையும் ஒரு கௌரவமான அதிகாரியா கொண்டு வந்துட்டேன்... ரொம்ப பெருமையா இருக்கு... நம்ம வாழ்க்கைய ஆரம்பிச்சது இந்த வண்டிதான்... இதுவும் பழசாயிடுச்சு... எனக்கும் வயசாயிடுச்சு... ஆனா என் மனசுல நீ மட்டும்... இந்த தாஜ்மகாலைப் பாக்கும்போதெல்லாம் மனசுக்குள்ள ஏற்பட்ற ஒரு உன்னதமான உணர்வு மாதிரி... இன்னும் புதுசாவே இருக்க ஷரோ...”