Sunday 8 February 2015

எங்கே அவள்?...

கொய்யாக் கனியவள் கொய்த என்மனத் துயரை
நைய்யாண்டி செய்குதோ சடையும் பின்னிடையும்
கையிருந்த கரும்புவில் காமன் கதறப் புருவமாகி
எய்தனள் ஓர் அம்புப் பார்வை இருவிழியால் எனைநோக்கி,

நோக்கிச் சென்றுவிட்டாள், நோகாமல் அந்தக் கன்னி
பாக்கியேதும் வைத்திராமல் பாவச்சேறு பட்ட என்னுடல்
ஆக்கி வைத்திருந்ததோ அள்ளவொண்ணா ஆணவச்சோறு
தாக்கின இஃதையெல்லாம் அத்தாரகை எய்த அம்பு.

அம்பினால் புண்ணியனாகி, அவள் அன்பினால் கண்ணியனாகி – ஓர்
வம்புக்கும் செல்லாதெந்தன் வாழ்வுக்கு வாழ்வு வர,
செம்புலம் நானானேன், சேர்ந்தவள் மழையாகி
எம்பிரான் ஆக்கம்போல் எனைச் செய்தாள் மையோடு,

மையோடு மலர்க்கொண்டு மலர்க்காணாத் தேன்கொண்டு
பொய்யாத மணம்கொண்டு போனாளே எனைக்கொண்டு
ஐயோ இது மெய்யோவென ஆனந்தம் ஊற்றெடுக்கப்
பொய்யென்று சொல்லிப்போனாள், போனவளைக் காணவில்லை.


No comments:

Post a Comment