Wednesday 4 February 2015

தாஜ்மகால், புகைவண்டி, நீ, நான்



தாஜ்மகால், புகைவண்டி, நீ, நான்
“இதே இடத்துலதான் முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஷரோவை மொத மொதல்ல பாத்தேன்...”
அம்மாவை அப்பா அப்படித்தான் கூப்பிடுவார். இங்கே உட்கார்ந்திருப்பவர் என் அப்பா. நின்று கொண்டிருப்பது நான். அப்பா சலீம் கௌஸ். வேலை தேடி ஆக்ராவிற்கு வந்தவர். அம்மா ஷர்தா. பஞ்சாப்பிலிருந்து வந்து ஆக்ராவில் குடியேறிய பாரம்பர்யமான சீக்கியக் குடும்பம்.
அந்த நேரத்தில்தான் எங்கோ நடந்த ஒரு இந்து முஸ்லீம் கலவரத்தின் பாதிப்பால் யாரோ சிலர் அப்பாவை இதே ரயிலிருந்து அடித்துக் கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள். காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இதே தாஜ்மகாலின் அருகில்தான். அப்பா அம்மாவின் சந்திப்பு நிகழ்ந்தது. அப்பாவின் மொத்தக் கதையும் சித்தி மூலமாக எனக்குத் தெரிந்திருந்ததால் அவரின் ஒரு சில பார்வைகளுக்கு எனக்கு அர்த்தம் புரியும். இப்போது அம்மாவை நினைத்தபடி அந்த இடத்தைப் பார்க்கும் அப்பாவின் மனதில் இருந்த வார்த்தைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
“எல்லாரும் பயந்து போய் சுத்தி நின்னு வேடிக்கை பாத்தாங்க, ஷரோதான் செயினை இழுத்து வண்டிய நிறுத்துனா.... அவ பண்ண அந்தக் காரியம்தான் இந்த உலகத்துல மனுஷத்தன்மை இன்னும் சாகலன்னு எனக்குப் புரிய வச்சுது...”
அந்த நொடியே அம்மாவின்மேல் வந்த காதல்தான் அவரை இதே ஊரில் ரயில்வேயில் வேலை தேடிக்கொண்டு இங்கேயே இருக்க வைத்தது. ஆனாலும், அம்மாவின்மேல் அப்பாவுக்கு வந்த அளவுக்கு, அம்மாவுக்கு காதல் வந்து விடவில்லை. சரியாகச் சொன்னால் அம்மாவின் மதம் காதலை வரவிடவில்லை. ஆனாலும் அப்பா மட்டும் காதலை விடவில்லை.
இதனால் அம்மா வீட்டார் ஆத்திரத்தில் அப்பாவின்மீது கொலை முயற்சி வரை போயிருக்கிறார்கள்.
ஒருமுறை இந்த ரயிலில் அம்மா தனியாக வந்து கொண்டிருந்தபோது அம்மாவைப் பார்த்த பரவசத்தில் அப்பா பேசவரும்போது எதிர்பாராமல் அப்பா தவறி ரயிலிலிருந்து விழப்போக, மின்னல் வேகத்தில் கையைக் கொடுத்த அம்மா தொங்கிக் கொண்டிருந்த அப்பாவிடம் தன்னைக் காதலிப்பது அவருக்கு ஆபத்து என்பதை உணர்த்தும் வகையில்,
“உங்க உயிர்மேல உங்களுக்கு ஆசையே இல்லையா?... ஏன் இப்படி பண்றீங்க?...”
அம்மாவின் கையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த அப்பா,
“இந்த உயிரு இன்னும் இருக்கதுக்கு காரணம் நீதான்... அது இனிமேலும் இருக்குறதும் இல்லாததும் உன் கையிலதான் இருக்கு... இதுக்கு மேலயும் உனக்கு விருப்பம் இல்லன்னா, நான் விட்டுட்றேன்... உன்னையும்... உன் கையையும்...”
என்று அம்மாவின் கையை விடப்போனதுதுதான் அம்மாவுக்கு அப்பாவின்மேல் மதங்களைத் தாண்டிய காதல் வந்த காரணம். அப்போதும் சாட்சியாக இருந்தது இந்தத் தாஜ்மகால்தான். அதற்குப் பின் பல தடைகளை மீறி அந்தக் காதலர்கள் கணவன் மனைவியாகித் தங்கள் காதலைத் தொடர்ந்தார்கள்.
“ஷரோ... உன் ஆசைப்படி ரிட்டையர்டாகுறதுக்குள்ள, நான் கீழ்மட்டத்துல தொழிலாளியா வேலை பார்த்த இதே ரயில்வேலயே என் கண்ணு முன்னாடி நம்ம பையனையும் ஒரு கௌரவமான அதிகாரியா கொண்டு வந்துட்டேன்... ரொம்ப பெருமையா இருக்கு... நம்ம வாழ்க்கைய ஆரம்பிச்சது இந்த வண்டிதான்... இதுவும் பழசாயிடுச்சு... எனக்கும் வயசாயிடுச்சு... ஆனா என் மனசுல நீ மட்டும்... இந்த தாஜ்மகாலைப் பாக்கும்போதெல்லாம் மனசுக்குள்ள ஏற்பட்ற ஒரு உன்னதமான உணர்வு மாதிரி... இன்னும் புதுசாவே இருக்க ஷரோ...”



No comments:

Post a Comment