Friday 20 February 2015

வேர் தேடும் நீர்

வேர் தேடும் நீர்

நான் மனித நேயம் பேசுகிறேன்...
எனக்கு மனித மனங்களில் இடம் கிடைக்கவில்லை... தற்போது புத்தகங்களில் மட்டும் சிறை வைக்கப்பட்டுள்ளேன்.
எத்தனையோ படைப்புக்களில் மனிதப் படைப்பும் ஒன்று.
ஐந்து அறிவுகளை பகுத்துப் பார்ப்பதற்கான கூடுதல் அறிவைப் பெற்ற ஒரு ஐந்து.
ஆறு அறிவுகளை விரலால் எண்ணிப் பார்த்த இந்தப் பிறவி,
அந்த ஆறாம் அறிவை மனதால் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டது...
எனக்குத் தெரிந்த வரையில் மனிதனுக்கும்,
அவன் சொல்லும் மற்ற ஐந்து அறிவு ஜீவன்களுக்கும் இருக்கும் வித்தியாசம்...
உணவை வேகவைத்துத் தின்பதிலும்,
உடைகளையும், உறைவிடத்தையும் பகட்டாக்கிக்கொள்வதிலும்,
இறுதியாக இறந்த பின்புகூட தன்னைச் சுற்றிக் கல்லறை கட்டிக்கொள்வதிலும்தான்...
இதைத் தவிர மனிதன் என்று சொல்லிக்கொள்ள, எந்தத் தகுதியையும் இது வளர்த்திருக்கவில்லை.
ஆக மொத்தம்...
மனிதா... நீயும் ஒரு ஜந்துதான்.
மனிதத்தன்மை அற்றவரை மிருகம் என்று சொல்வதை இனி நிறுத்திக்கொள்.
மிருகத்துக்கு அன்பு காட்ட மட்டும்தான் தெரியும்
அன்பு காட்டுவதுபோல் நடிக்கத் தெரியாது.
தன்னைக் காத்துக்கொள்வதற்காகப் பிற உயிர்களைக் கொல்லத் தெரியும்.
உன்போல் பிறரை அழிப்பதற்காகத் தன்னைக் கொல்லத் தெரியாது.
விரோதம் தெரியும். துரோகம் தெரியாது.
மகாத்மா காந்தி ரோடு, காமராஜர் சாலை, பாரதியார் நகர், வ.உ.சி தெரு என்று, உனக்கு வழிகாட்ட வந்தவர்களையெல்லாம்
நெஞ்சில் வைத்துக்கொள்ள நேரமில்லாமல்,
தெருவோடு நிற்க வைத்தது போதும்...
இப்போதாவது என்னை ஏற்றுக்கொள்.
என்னால் மட்டுமே உனக்கு அமைதி கிடைக்கும்...
நான் இல்லாமல் உன் பிறவிக்கு வாழ்க்கையும் இல்லை.... வரலாறும் இல்லை...
இப்படிக்கு,
மனித நேயம்...

No comments:

Post a Comment