Tuesday 3 March 2015

பெண்மையும் மென்மையும்

பெண்மையும் மென்மையும்

      வாசலில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஜெர்ரி குரைப்பதைக் கேட்டபோதுதான், கேட்டை திறந்தபடியே விட்டுவிட்டு வந்தது ஹரீஷுக்கு ஞாபகம் வந்தது. வேகமாக வாசலுக்கு ஓடினான். எது நடக்கக்கூடாது என்று நினைத்து ஓடினானோ அதுவே நடந்திருந்தது. 

அந்தத் தெருவோரத்தில் நரிக்குறவர் கும்பல் ஒன்று சமீபகாலமாக ஆக்ரமித்திருந்தது. அந்த கும்பலைச் சேர்ந்த சிறுவர்கள் சில நேரங்களில் விளையாட்டிக்கொண்டே வீட்டு வாசலுக்கு வந்து நின்று கொண்டிருப்பது ஹரீஷுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. எவ்வளவோ விரட்டிப் பார்த்தும் மீண்டும் மீண்டும் அங்கேயே வந்து கொண்டிருந்தார்கள். இது பெரிய தொல்லையாக இருந்தது. அந்தச் சிறுவனை சத்தமில்லாமல் மிரட்டி வெளியே அனுப்பினான். அந்த நேரத்தில் உள்ளேயிருந்து நேஹா வர,

“இதோ பாரு நேஹா... அதுங்க இம்சை தாங்க முடியல... வாசல்ல காரை நிறுத்த முடியல... சாயந்திரம் ஒரு ஷட்டில் கார்க் விளையாட முடியல... கம்முனு போலீஸ்ல கம்ப்ளையிண்ட் பண்ணப்போறேன்...”

“என்னன்னு கம்ப்ளையிண்ட் பண்ணப்போற ஹரி?... அவங்க உன்னை என்ன பண்ணாங்க?... ஏதோ நாடோடிப் பொழப்பு பொழக்கிறவங்க... அங்கங்க கொஞ்ச நாள் இருந்துட்டு அப்படியே போயிடப்போறாங்க... அவங்க மேலப் போயி கம்ப்ளையிண்ட் குடுக்குறேன், அது இதுன்னுட்டு... போயி வேலையப் பாரு...”

நேஹாவுக்கு இது ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை.

“நான் ஆபீஸ் போயிட்டதுக்கப்புறம் நீதான் வீட்ல இருக்கப்போற நேஹா... அப்புறம் அவங்க இது பண்ணிட்டாங்க... அது பண்ணிட்டாங்கன்னுல்லாம் ஏதாவது சொன்னேன்னா, அவ்வளவுதான்... அன்னக்கி அப்படித்தான், நித்திஷ் கார்லருந்து கையில பலூனை வச்சிக்கிட்டு  இறங்குறான்... அந்தப கும்பல்லருந்து ஒரு பையன் பலூனையே உத்துப்பாத்துட்டு கிட்ட வர்றான்... அவனைப் பாத்துட்டு குழந்தை பயப்பட்றான்....அதுவும் ஒரு பொம்பள இருக்கே, அவங்கம்மா... அந்தப் பொம்பளையப் பாத்தா எனக்கே பயமா இருக்கு... அது வாயி நிறைய பாக்கப் போட்டுக்கிட்டு... அய்யய்யோ...”

நேஹா எதுவுமே சொல்லாமல் உள்ளே போய்விட, ஹரீஷ் கோபத்தில் கேட்டை மூடிவிட்டு உள்ளே சென்றான்.

மறுநாள்.

அவசரமாக மெயில் அனுப்பிக் கொண்டிருந்தவனை தொலைபேசியில் நேஹா அழைத்தாள்.
“சொல்லுமா...”

அவசர கதியில் நேஹா,

“ஹரி... நித்திஷ் ஜெர்ரிகூட விளையாடிட்டிருக்கும்போது ரோட்டுக்குப் போயிட்டான்...”

“அய்யய்யோ... அந்த கும்பல் ஏதும் பிரச்சனை பண்ணுச்சா?... அதுவரைக்கும் நீ என்ன பண்ணிட்டிருந்த?... “

“நான் பால்கனிலதான் இருந்தேன்... இப்ப ஏன் கத்துற?... ஒன்னும் பிரச்சனை ஆயிடல...... நித்திஷ் விளையாடிட்டிருந்தான்... ஒரு ஆட்டோ தெருவுக்குள்ள வேகமா வந்துச்சு... கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா ஆட்டோக்காரன் நித்திஷ்மேல இடிச்சிட்டு போயிருப்பான்... நீ சொல்லுவியே மூஞ்சியப் பாத்தாலே புடிக்கலைன்னு... அந்த லேடிதான் ஓடிப்போயி நித்திஷைத் தூக்கிக்கிட்டாங்க... பாவம் குழந்தை... அவங்க மட்டும் இல்லேன்னா, இந்நேரம் இவனைத் தூக்கிட்டு ஹாஸ்பிட்டல்லருந்துதான் கூப்பிட்டிருப்பேன்...

ஹரீஷ் ஒரு கணம் பேச்சே வராமல் இருந்தான்.


எப்படிப்பட்ட வெறுப்பையும் தாய்மை என்ற அந்த ஒரு மென்மையான, அழுத்தமான உணர்வு தகர்த்தெறிந்து விடுகின்றது...


No comments:

Post a Comment