Sunday 1 March 2015

ஏழாம் அறிவாய்க் காதல்!...

ஏழாம் அறிவாய்க் காதல்.

ஐந்து அறிவும் இயக்கத்தில் வீழ,
ஆறாம் அறிவு மயக்கத்தில் ஆழ,

ஏழாம் அறிவாய் இந்தக் காதல்
என்னுள் வந்ததை எப்படிச் சொல்வேன்?...

தந்தை தாயின் காதலில் பிறந்தேன்...
அந்தத் தாபமோ இந்தக் காதல்?...

விந்தும் நாதமும் சேர்ந்திடப் பிறந்தேன்...
அந்தப் பாவமோ இந்தக் காதல்?...

பருவக் காற்று மனதைச் சுழற்றும்
அருவச் சுழலோ இந்தக் காதல்?...

உருவந் தொலைத்து உயிரைக் கரைத்து
உருக்கிக் குடிக்கும் இந்தக் காதல்...

சித்தம் மொத்தம் நித்தம் முத்தம்
யுத்தம் செய்யும் இந்தக் காதல்.

ரத்தம் நித்தம் சத்தம் செய்யப்
பித்தம் செய்யும் இந்தக் காதல்

ஆசை இல்லா மாந்தர் தம்மில்
நேரக் கொடுமை இந்தக் காதல்

ஓசை இல்லா பூகம்பங்கள்
நேரக் கொடுமை செய்யும் காதல்...

இன்பம் தந்தே இம்சை செய்யும்
துன்பத் தேனாம் இந்தக் காதல்...

துன்பம் தந்தும் அன்பைச் சிந்தும்
இன்பத் தீயாம் இந்தக் காதல்...

கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும்,
உற்றே அறிய, ஐந்தே அறிவைக்,

கொண்டே மண்ணில் பிறக்கும்போதே
கொண்டேன் மனதை ஆறாம் அறிவாய்.

பாழாய்ப் போன ஆறாம் அறிவும்
பெண்ணே உன்னால் காணாதொழிய,

ஏழாம் அறிவாய் இந்தக் காதல்

என்னுள் வந்ததை எப்படிச் சொல்வேன்?...

No comments:

Post a Comment