Wednesday 28 January 2015

ஆணிவேர்

ஆணிவேர்

“மேம்...”
குரல் கேட்டுத் திரும்பினேன்.
தான் ஒரு மணமகள் என்பதைக்கூட யாமினி மறந்து என் வகுப்பறையில் நான் அவளைக் கூப்பிட்டபோது ஓடிவந்த அதே சிறுமி போல் ஓடிவந்தாள்.
“மேம்... சாப்பிட்டு உடனே போயிடாதீங்க... இதோ வந்துர்றேன்...”
மீண்டும் மேடைக்கு ஓடினாள். என்னிடம் படித்த மாணவிகளில் இவள்தான் இன்றுவரை என்னை ஞாபகம் வைத்திருந்து தன் திருமணத்துக்கும் அழைத்திருந்தாள்.
சாப்பிடுவதற்காக உள்ளே சென்றேன். கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட வாழை இலை. பரிமாறும் ஆட்களில் யாருமே சொந்தக்காரர்கள் இல்லை. எல்லாரும் வெள்ளை சீருடையில் இருந்த கான்ட்ராக்ட் ஆட்கள்தான். முன்பெல்லாம் திருமணங்களில் ஒரு சித்தப்பாவோ, மாமாவோ, பந்தியில் நின்று கவனித்துக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் இப்போது பார்க்க முடியவில்லை. எதிர்பார்க்கவும் முடியவில்லை. ரொம்பவும் கூட்டமாக இருந்ததால் மீண்டும் ஹாலுக்கு வந்தேன்.
யாமினி நல்ல புத்திசாலிப்பெண். விளையாட்டு, பொது அறிவு என்று எல்லாவற்றிலும் ஆர்வமுள்ளவள். ஒருமுறை சர்தார் வல்லபாய் பட்டேலிடம் ஒரு ஆங்கிலேயர் கேட்ட கேள்வியையும், அவர் சொன்ன பதிலையும் சொல்லிக் கொண்டிருந்தேன்.
“What is your culture?... “
“Agriculture…”
இதைக் கேட்ட யாமினி ஆர்வத்துடன்,
“மேம்... நான் ஒரு கவிதை எழுதிருக்கேன்... சொல்லட்டுமா?...”
“ம்...”
“உயிரை உருவாக்கும் தாய்மண்ணின் கருவறைக்குள், கட்டுமானக் கம்பிகளையும், கல்லையும் திணிக்கும் இந்த சமூகத்தில், இருக்கும் ஓரிரு உழவனும் நிலங்களை, மனைகளாக்கிச் சென்று விட்டால், பிறகு எந்த செங்கல்லையும் மணலையும் தின்று ஜீரணிப்பதோ தெரியவில்லை...”
யாமினிக்கு விவசாயக் குடும்பம். கொஞ்சம் விளைநிலங்களுக்குச் சொந்தக்காரர். இவர்களைப் போல் சிலராவது இன்னும் விவசாயத்தை விடாமல் செய்து வருவது ரொம்பவே சந்தோஷத்தைத் தருவதாக இருந்தது.
மறுபடியும் யாமினி மேடையிலிருந்து என் அருகில் வந்து உட்கார்ந்தாள்.
“அப்புறம் யாமினி... மாப்பிளை என்ன சொல்றாரு?...”
“அவரு என்ன சொல்றாரு?... அவங்கம்மா அப்பாதான் சொல்லிக்கிட்டே இருக்காங்க...அது வாங்கிடுங்க, இது வாங்கிடுங்கன்னு... எங்கப்பாவும் இந்த வரனை விட்டுரக் கூடாதுன்றதுக்காக அவங்க கேட்டதெல்லாம் குடுத்துக்கிட்டே இருக்காரு... நான் தெரியாமதான் கேக்குறேன்... மாப்பிளைக்கும் அதே செவ்வா தோஷம் இருக்குல்ல?... பொண்ணு வீட்ல மட்டும்தான் அனுசரிச்சுப் போகணுமா?...”
“நாளைக்கி உனக்கு ஒரு பொண்ணு பொறந்து, பெத்தவங்க ஸ்தானத்துல இருக்கும்போது தெரியும்...”
“இல்ல மேம்... எதை வேணாலும் பொறுத்துக்கலாம்... அவங்க பிளாட்டு கேட்டாங்கன்றதுக்காக, இருந்த நிலத்துல முக்காவாசிய ஒரு பில்டர்க்கிட்ட வித்து பிளாட் வாங்கிக் குடுத்துருக்காங்க.... இப்படியே ஆளாளுக்கு ஒரு காரணத்துக்காக விவசாயத்தை விட்டுட்டிருந்தா, அப்புறம் என்னதான் மேம் ஆகுறது?...”
உணர்ச்சியுடன் தன் ஆதங்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்த யாமினிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் யோசித்தேன். மீண்டும் அவள் அக்கா அழைக்க, யாமினி ஓடினாள்.
வல்லபாய் பட்டேல் சொன்னதையும் யாமினி சொன்னதையும் நினைத்துப் பார்க்கிறேன்.




No comments:

Post a Comment